Jan 30, 2019 / Daily Thanthi
சென்னை சென்டிரலில் இருந்து சென்னை கடற்கரைக்கு ஒரு சுற்று வரும் புதிய ரயில் பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவை சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், தக்கோலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக கடற்கரையை அடையும்.
இந்த புதிய ரயில் பாதை மற்றும் புதிய ரயில் மூலம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணிக்கும் பயணிகளின் பயண தூரம் சுமார் 190 கி.மீ. அளவுக்குக் குறையும். இந்தியாவின் மிக நீண்ட ரெயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர் ரெயில் மாறுகிறது!
தற்போது திருவள்ளூர் மார்கத்தில் இருந்து பயணிகள் சென்னை சென்டிரல் அல்லது கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வந்து செங்கல்பட்டுக்குச் செல்லும் ரெயிலில் பயணிக்க வேண்டும். இது சுமார் 126 கி.மீ. தூரமாகும்.
ஆனால் அதே சமயம் திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டுக்கு அரக்கோணம் வழியாக செல்ல வேண்டும் என்றால் வெறும் 96 கி.மீ. தூரம்தான். இதன் மூலம் 30 முதல் 40 நிமிட நேர பயண நேரம் குறையும். இதே போலத்தான் வண்டலூர், மறைமலைநகர், செங்கல்பட்டில் இருந்து ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் வர வேண்டும் என்றால் அவர்கள் இதுவரை பேருந்துப் பயணத்தையே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இந்த புதிய ரெயில் பாதை மூலம் இவர்களும் ரயில் பாதையை தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படும்.
ஒரு நாளைக்கு சென்னை புறநகர் ரயிலை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகிறார்கள். அதில்லாமல், திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டு மார்கத்துக்கு வரும் பயணிகள் அரக்கோணம் மார்க்கத்துக்கு திருப்பிவிடப்படுவதால், சென்னை சென்டிரல் – சென்னை பார்க் ரெயில் நிலையங்களில் தற்போதிருக்கும் கூட்ட நெரிசல் பெருமளவுக்குக் குறையும் என்பது நிதர்சனமான உண்மை.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தக்கோலம் – அரக்கோணம் இடையிலான 9.5 கி.மீ. நீளப் பாதை பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் போதும். சென்னை புறநகர் ரயில் சேவை ஒரு சுற்றுப் பாதையாக மாறி இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக மாறிவிடும்.
இந்த புதிய ரயில் பாதை மூலம் காவேரிபாக்கம், ஒச்சேரி, திருமால்பூர் உள்ளிட்ட சில கிராம மக்களும் இனி ரயில் வசதியை பெறுவார்கள்.
தக்கோலம் முதல் அரக்கோணம் வரையிலான அந்த 9.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கிவிட்டால் சுமார் 235.5 கி.மீ. தொலைவுக்கு சுற்றுவட்ட ரெயில்பாதை அமையும். அதாவது வடக்கு – மேற்கு மற்றும் தெற்கு – மேற்கு புறநகர் ரெயில் சேவைகள் இணைக்கப்படும். திருவள்ளூரில் இருக்கும் நபர் சென்னை கடற்கரை அல்லது சென்னை சென்டிரல் வராமலேயே செங்கல்பட்டுக்கு பயணிக்கும் வசதி ஏற்படும்.